*சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாசமாக பங்கேற்பு
சிவகாசி : சிவகாசி தேரடிவீதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடி மகிழ்ந்தனர்.சென்னை, திருச்சி, கோவை மாநகரங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலைப் பொழுதில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பு மக்களும் சாலைகளில் விளையாடி மகிழும் வகையில் ‘‘ஹேப்பி ஸ்ட்ரீட்’’ என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலைகள், சைக்கிள் சாகசம் போன்ற விளையாட்டுகள், தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையிலும், திருச்சியிலும், கோவையிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி, திருப்பூர் உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளிலும் நடைபெற தொடங்கியுள்ளது. அந்த வரிசையில், சிவகாசி மாநகரில் நேற்று ‘‘ஹேப்பி ஸ்ட்ரீட்’’ நிகழ்ச்சி முதல்முறையாக நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சி, சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எம்எல்ஏ அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம், ஆணையாளர் சங்கரன், டிஎஸ்பி தனஞ்ஜெயன், கோட்டாட்சியர் விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
சிலம்பாட்டம், இளவட்ட கல் தூக்குதல்…
நேற்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சிவகாசி ரதவீதிகளுக்குள் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரதவீதிகளில் குறிப்பாக தேரடி வீதியில் ஆடல் பாடல் விளையாட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சறுக்குமரம், சிலம்பாட்டம், கயறு ஏறுதல், கயிற்றில் தொங்கியபடி யோகா செய்தல், இளவட்ட கல் தூக்குதல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், தற்காப்பு கலைகள், டயர் ஓட்டுதல், டயர் தூக்குதல், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போதை பொருளுக்கு எதிரான யையெழுத்து இயக்கம்
தொடர்ந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பான உறுதிமொழியினை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டனர். மேலும், போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பான கையெழுத்து இயக்கத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக கையெழுத்திட்டனர்.
2கே கிட்ஸ்க்கு டப் கொடுத்த மூதாட்டி
நிகழ்ச்சி நடைபெறும் ரதவீதியில் ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்றவாறு 2கே கிட்ஸ் செம குத்தாட்டம் போட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்து வந்த 70 வயது மூதாட்டி 2கே கிட்ஸ்க்கு டப் கொடுத்த குத்தாட்டம் போட்டார்.
இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.இயந்திர மனிதர்களுக்கு மகிழ்வை கொடுக்கும் ”ஹேப்பி ஸ்ட்ரீட்”நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பேசும்போது, ‘‘நாள்தோறும் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சிவகாசி மக்கள் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டு மகிழ்வாக வார விடுமுறையை கொண்டாடும் நோக்கத்திலும், பொதுமக்கள், இளைஞர்களின் திறமைகளை வெளிகொணரும் நோக்கத்திலும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களுக்கு உள்ள திறமைகளை உற்சாகமாய் வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் சிவகாசி மாநாகராட்சி சிவன்கோவில் சாலை பகுதி, மக்களின் மகிழ்ச்சியில் திளைத்தது.’’ என பேசினார்.
இனி மாதந்தோறும் நடக்கும்சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கூறும்போது, ‘‘சிவகாசியை பொறுத்தவரை தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் தினந்தோறும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கூட பழகுவது குறைவு. தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்கு, ஞாயிற்றுக்கிழமைகள் வரப்பிரசாதங்கள்.
எனவே, இதுபோன்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மூலம் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும் பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர். மேலும் அரசின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாதமாதம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்’’ என தெரிவித்தார்.
The post ஆடல், பாடல், விளையாட்டு என முதல்முறையாக சிவகாசியில் களைகட்டிய ‘‘ஹேப்பி ஸ்ட்ரீட்’’ appeared first on Dinakaran.
