களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

*நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு சொர்ணவாரி பட்டத்தில் விவசாயிகள் நெல் ரகங்களான மகேந்திரா, கோ 51 உள்ளிட்ட பயிர்கள் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்தனர். இதில், விளைந்து நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் சாலைகள், விவசாய நிலங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, ஏரிகள், நிர்நிலைகள் தண்ணீர் நிரம்பியது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான களம்பூர், அய்யம்பேட்டை, நரியம்பேட்டை, ஏரிக்குப்பம், ஏந்துவாம்பாடி, கஸ்தம்பாடி, கிருஷ்ணானபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 500 ஏக்கர் நெல்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது.

இதில், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ₹25 முதல் 30 ஆயிரம் வரை செலவழித்து அறுவடை செய்யும் நேரத்தில் மழைநீரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே, வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு:
களம்பூர், அய்யம்பேட்டை, கஸ்தம்படி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் அருகில் உள்ள ஏரிநீர்வரத்து கால்வாய்களை தனிநபர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதில், களம்பூர் பெரிய ஏரியில் இருந்து புங்கம்பாடி, மலையாம்பட்டு ஏரிக்கு செல்லும் ஏரிக்கால்வாய், நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தற்போது பெய்துள்ள கனமழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலங்களில் தேங்கியிருக்கும் மழைநீர் வெளியேற்ற முடியாதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகிறது. எனவே, தனிநபர் ஆக்கிரமித்துள்ள ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Related Stories: