அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர் திருவிழா கோலாகலம்: களைகட்டிய குதிரை சந்தை

அந்தியூர்: அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமர்சையாக நடந்தது. இதையொட்டி நடக்கும் புகழ்பெற்ற கால்நடை சந்தைக்கு ஏராளமான குதிரைகள், ஆடு, மாடுகள் வந்து குவிந்துள்ளன. ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள புதுப்பாளையத்தில் பழமை வாய்ந்த குருநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆடி தேர் திருவிழாவை முன்னிட்டு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற குதிரை மற்றும் கால்நடை சந்தைகள் நடப்பது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடிப்பெருந்தேர் திருவிழா இன்று குதிரை மற்றும் மாட்டு சந்தைகளுடன் துவங்கியது. இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் (12ம் தேதி வரை) நடக்கிறது.

திருவிழாவில் இன்று காலை புதுபாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயிலில் இருந்து மூங்கில்களால் அலங்கரிங்கப்பட்ட மகமேறு தேர்களில் பச்சாயி, பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய சுவாமிகள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக்கோயிலுக்கு பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து சென்றனர். அங்கு குருநாதசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையொட்டி, கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர். மன்னர் காலங்களில் போருக்கு பயன்படுத்திய உயர் ரக குதிரைகளான மார்வார், நொக்ரா, கத்தியவார் உள்ளிட்டவை ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் புகழ்பெற்ற காங்கயம் காளைகள், நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள், ஆடுகள், கன்றுகள் மற்றும் கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி மற்றும் ஆந்திராவை பூர்விமாகக் கொண்ட ஓங்கோல் இன மாடுகளும் கால்நடை சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தியூர் திருவிழாவையொட்டி குதிரை சந்தை களைகட்டியது. தென்னிந்திய அளவிலான குதிரை சந்தையில் மக்கள் திரண்டுள்ளனர். பல்வேறு வகையான குதிரைகளை காண மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இசைக்கேற்ப நடனமாடும் குதிரையை கண்டு ரசித்து வருகின்றனர்.

இவைகளை வாங்கி செல்வதற்கு தமிழக மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பவானி போலீஸ் டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர் திருவிழா கோலாகலம்: களைகட்டிய குதிரை சந்தை appeared first on Dinakaran.

Related Stories: