430 பயனாளிகளுக்கு ₹1.08 கோடி வைப்பு தொகைக்கான ஆணை

கிருஷ்ணகிரி, ஆக.9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 430 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி நடத்தப்பட்ட காணொலி ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளிடமிருந்து அதிகமாக புதிய விண்ணப்பங்கள் பெற்று 2021-22ம் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை முழுமையாக செலவினம் மேற்கொள்ளவும், ஏற்கனவே இத்திட்டத்தில் அசல் வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது முதிர்வடைந்தவர்களை கண்டுபிடித்து, உரிய ஆவணங்களுடன் கருத்துரு பெற்று, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலமாக முதிர்வுத் தொகையினை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசால் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகள் குறைந்தபட்ச கல்வி தகுதியான 10ம் வகுப்பு தேர்ச்சிப்பெறும் பொருட்டு, முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, மாவட்ட சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் சரயு துவக்கி வைத்து, 430 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று, இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதியன்று நடத்தப்பட்டது. இம்முகாமில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு வைப்பு தொகை ரசீது மற்றும் முதிர்வு தொகை காசோலைகள் வழங்கப்பட்டு மனுக்களும் பெறப்பட்டது. அதன்படி, ஜூலை 11ம் தேதியன்று பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் 430 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகைக்கான ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ₹25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தையின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று, உயர்கல்வி பயின்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டு, புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும் மற்றும் இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், துறை சார்ந்த அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 430 பயனாளிகளுக்கு ₹1.08 கோடி வைப்பு தொகைக்கான ஆணை appeared first on Dinakaran.

Related Stories: