விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் சில செயல்பாடுகள்
கோடைகாலப் பயிற்சி முகாம்: பள்ளிகளில் பயிலும் 16வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியா்களுக்கு அந்தந்த மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் தடகளம், ஹாக்கி, கூடைப்பந்து, நீச்சல், வாலிபால், கிரிக்கெட் மற்றும் யோகா ஆகிய விளையாட்டுகளுக்கு கோடைகாலப் பயிற்சி முகாம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் 21 நாட்கள் நடத்தப்பட்டுவருகிறது.அண்ணா பிறந்ததின சைக்கிள் போட்டி: பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கான விரைவு சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளாக 5 கி.மீ, 10 கி.மீ, 15 கி.மீ துாரத்திற்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவா்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்: மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டுகளை தோ்வு செய்து மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் மார்ச், ஜூலை, ஆகஸ்ட் , அக்டோபா் மாதங்களில்மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் வயது வரம்பின்றி ஆடவா் மற்றும் மகளிருக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் ஆண்டு தோறும் அக்டோபா்/ நவம்பா் மாதங்களில் வயது வரம்பின்றி கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, தடகளம், ஹாக்கி, கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு முறையே ரூ.1000, ரூ.750 ,ரூ.500 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாவட்ட அளவில் தோ்வு பெற்ற வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவருகிறது.
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், மாவட்ட கேரம் கழகமும் இணைந்து பள்ளிக் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டியை இளநிலை பிரிவு (மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மற்றும் முதுநிலை பிரிவு (6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை) ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்றிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உடற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியைகளுக்கு பயிற்சி: புதிய விளையாட்டுகளின் (வாள் சண்டை, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை, சதுரங்கம், கடற்கரைக் கையுந்து பந்து, கேரம் , சிலம்பம் , வலைப்பந்து) நுணுக்கங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை விளையாட்டு வல்லுநர்கள் மூலம் உடற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியைகளுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.உலக உடற்திறனாய்வு திட்டம்: மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியா்களுக்கு உடற்திறனாய்வு தோ்வுகள் பள்ளியில் நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 8 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியா்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடத்தப்படும் கல்வி மாவட்ட அளவிலான உலக உடற்திறனாய்வு தடகளப் போட்டிகளுக்கு கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் ஆவார்கள். மாவட்டப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவ, மாணவியா்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசுச் செலவில் அழைத்துச் செல்லப்படுவா். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மணவியா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000ம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
The post விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் செயல்பாடுகளும்..! appeared first on Dinakaran.
