எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை நேற்று காலை உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தை முகமது மகிர், தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் திரவ உணவை செலுத்துவதற்காக வலது கையில் ஊசியை பொருத்தியுள்ளனர். இதில் ரத்த ஓட்டம் தடைபட்டு கருஞ்சிவப்பாக மாறிய குழந்தையின் வலது கையை மருத்துவர்கள் அகற்றினர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை விசாரிக்க சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து குழந்தையின் தாய் அஜிஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கடந்த 29ம் தேதி தலையில் உள்ள நீரை மீண்டும் பரிசோதனை செய்ய கொடுத்தார்கள். அதில் பாதிப்பு இருக்கிறது என்று கூறினர். தலையில் நீர் பாதிப்பு இருப்பதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். புதிய நீர் குழாய் வைக்கவேண்டும், பழைய நீர் குழாய் வைத்தால் 100 சதவீதம் உயிருக்கு பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை என்றும் செயற்கையாக மருந்துகள் மூலம் அளிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் தான் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

நரம்புகள் நிறைய துண்டிக்கப்பட்டதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். நரம்புக் துண்டிக்கப்பட்டதற்கும், குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கும் மருத்துவர்கள் அலட்சியம்தான் காரணம். அதற்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைக்கு புதிய அறுவை சிகிச்சை எதற்கு என நான் கேட்டதற்கு தலையில் ஓட்டை போட்டு முதுகு தண்டு வழியாக நீரை வெளியேற்றும் படி அறுவை சிகிச்சை செய்வோம் என மருத்துவர்கள் கூறினர். இது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என கேட்டதற்கு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறினர்.

பிறகு ஏன் இந்த சிகிச்சை குழந்தைக்கு செய்ய வேண்டும் என நான் மருத்துவர்களிடம் கேட்டேன். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்த பிறகு அறுவை செய்து கொள்ளலாம் என்றேன்.
குழந்தையின் உயிருக்கு ஆபத்து, ஸ்டென்ட் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என 15 மருத்துவர்கள் கொண்ட குழு எனக்கு அழுத்தம் கொடுத்ததார்கள். அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர்.

அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை இறந்து விடும் என்று தெரிந்து தான், போட்ட வழக்கை முடிப்பதற்காக மருத்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அழுத்தம் கொடுத்தனர்.
தாய்மார்கள் எந்த மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக சென்றாலும் அங்கு குழந்தைகளுக்கு நோய்க்கு உரிய சிகிச்சை தான் வழங்கப்படுகிறதா, அதற்கான மருந்துகள் தான் பயன்படுத்தபடுகிறதா என தைரியமாக மருத்துவர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: