தூத்துக்குடி பேராலய திருவிழா பனிமய மாதா தங்கத்தேரில் பவனி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில், நேற்று அன்னையின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 441வது ஆண்டு பெருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியாக, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 53 அடி உயர தங்கத்தேர் பவனி, நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணியளவில் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ருந்த தங்கத்தேர் கூடம் திறக்கப்பட்டது. காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், 7 மணிக்கு கோவா உயர்மறை மாவட்ட ஆயர் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் ஆயர் இம்மானுவேல் பர்னாண்டோ ஆகியோர் தங்கத்தேரை அர்ச்சிப்பு செய்து வைத்தனர். காலை 8.10 மணிக்கு பனிமய மாதா தங்கத்தேர் பவனி தொடங்கியது. மரியே வாழ்க, மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷம் எழுப்பியபடி மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். வீதிகளின் இருபுறமும் இருந்த வீடுகளின் மாடியில் இருந்தபடி மக்கள், தேர் மீது பூக்களை தூவி வழிபட்டனர். மதியம் 12 மணி அளவில் தேர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அந்தமான், மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி பேராலய திருவிழா பனிமய மாதா தங்கத்தேரில் பவனி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: