ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுர சிலாப் இடிந்து விழுந்தது : பக்தர்கள் அதிர்ச்சி: அதிகாலை நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்த சிலாப் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதைக்கேள்விப்பட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் அதிகாலை நடந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் ஏற்கனவே சேதமடைந்திருந்த முதல் நிலை சிலாப் மொத்தமாக இடிந்து கீழே விழுந்தது. அப்போது கம்பிகள் மீது கற்கள் விழுந்ததில் கீழே இருந்த ஒரு மின் கம்பம், ஒரு கேபிள் கம்பம் சாய்ந்தது.

மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பத்தை சரி செய்தனர். மீண்டும் 3.30 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வழியே பக்தர்கள் செல்லாதபடி தடுப்பு வேலி வைக்கப்பட்டுள்ளது. சிலாப் விழுந்த இடத்தில் பகல் நேரத்தில் பக்தர்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் அதிகாலையில் சிலாப் இடிந்து விழுந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

சென்னையிலிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் ஸ்ரீரங்கத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோபுரத்தின் சிலாப் இடிந்து விழுந்து தகவல் அறிந்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறுகையில், இடிந்து விழுந்த சிலாப்பை மீண்டும் சீரமைக்கவும், சேதமடைந்துள்ள சுதைகளை பாதுகாக்கவும் ரூ.98 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரித்து இந்து சமய அறநிலைய துறைக்கு அனுப்பி உள்ளது. சீரமைக்க போதுமான நிதி கோயிலிலேயே உள்ளது. அறநிலையத்துறை அனுமதி விரைவில் கிடைத்து விடும். அனுமதி கிடைத்தவுடன், பணிகள் துவங்கும் என்றார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுர சிலாப் இடிந்து விழுந்தது : பக்தர்கள் அதிர்ச்சி: அதிகாலை நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: