ஊத்துக்கோட்டையில் மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

ஊத்துக்கோட்டை: மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கிராம தேவதை மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா கடந்த 30ம்தேதி தொடங்கியது. அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை செல்லியம்மன் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல்வைத்து வழிப்பட்டனர். முன்னதாக செல்லியம்மனுக்கு அபிஷேககமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அன்று மாலை அங்காளம்மன் மற்றும் எல்லையம்மன் கோயிலிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் கரக ஊர்வலம் நடைபெற்றது 4வது நாள் இரவு உற்சவரான மாரியம்மன் ரெட்டி தெரு, செட்டித்தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக காப்புகட்டிய பக்தர்கள் மாரியம்மன் திருவுருவத்தை இரவு முழுவதும் பல்லக்கில் தூக்கிக்கொண்டு திருவீதியுலா சென்றனர்.

அப்போது பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் 5ம் நாளான நேற்று மண்ணடியில் அம்மன் இறக்கி வைக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக ரெட்டித்தெரு, செட்டி தெரு பகுதியில் இருந்து பெண்கள் ஊர்வலமாக தாங்கள் கொண்டு வந்த கும்பசாதத்தை மாரியம்மன் கோயில் முன்பு வைத்தனர். மலைபோல் குவிக்கப்பட்ட கும்பசாதத்தை அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். பிறகு அந்த கும்பசாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

The post ஊத்துக்கோட்டையில் மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: