கடன் தொல்லை காரணமாக நகை கடையில் திருடிய இளம்பெண் கைது: சிசிடிவி கேமராவால் சிக்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டிப் டாப் உடை அணிந்த இளம்பெண் வந்துள்ளார். அவர் நகையை வாங்குவதுபோல் நடித்து பல்வேறு நகைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென உரிமையாளரை திசை திருப்பிவிட்டு 24 கிராம் எடையுள்ள 2 தங்கச் செயினை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர் உடனடியாக வெளியே சென்று அப்பெண்ணை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த இளம் பெண் அவரிடம் சிக்காமல் சென்றுவிட்டார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அசோக், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (25) என்பவர்தான் இந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காயத்ரியை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காயத்ரிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, காஞ்சிபுரம் நகைக்கடையில் செயின்களை திருடிச் சென்றதாக போலீசாரிடம் காயத்ரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து காயத்ரியை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 தங்க செயின்களையும் பறிமுதல் செய்தனர்.

The post கடன் தொல்லை காரணமாக நகை கடையில் திருடிய இளம்பெண் கைது: சிசிடிவி கேமராவால் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: