தாமல்-ராஜகுளம் வரையிலான நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் – ராஜகுளம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கிமீ நீள சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் 2018ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கிமீ நீள சாலை விரிவாக்க பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கிமீ நீள சாலை விரிவாக்கப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021ம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2023ம் ஆண்டில் ஜூலை மாதம் முடிய உள்ளநிலையில் பணிகள் முடிவடையவில்லை. ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரை மொத்தம் 34 மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும்.

இதில், காஞ்சிபுரம் அருகே கீழம்பி, பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால கட்டுமானப் பணி 70 சதவீத அளவு மட்டுமே முடிந்துள்ளது. இதனால், இந்த சாலையில் வாகனங்களை இயக்குவது பெரும் சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் முதல் ராஜகுளம் பகுதிவரை உள்ள இடங்களில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வரும் நிலையில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளை சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர். இதனால், அதே திசையில் அதிவேகத்தில் வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிற்பதை கணிக்க முடியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மீது சொகுசு கார் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீண்ட நேரம் வாகனங்களை இயக்கும் கனரக வாகன ஓட்டிகள், உணவருந்த, டீ குடிக்க, இயற்கை உபாதை கழிக்க வசதியாக குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்க காஞ்சிபுரம் அருகே டெர்மினஸ் ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தாமல்-ராஜகுளம் வரையிலான நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: