ஊத்துக்கோட்டை: அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் ஓராண்டுக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்கவேண்டுமென கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் அத்தங்கிகாவனூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அத்தங்கிகாவனூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு இ-சேவை மையம் அருகே கடந்த ஓராண்டுக்கு முன் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
எனினும், இந்த அங்கன்வாடி மையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. இதனால், அங்கு படிக்க வேண்டிய மாணவர்கள், தற்போது ஒரு பாழடைந்த கட்டிடத்தில்தான் தொடர்ந்து படிக்க வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக புதிதாக கட்டப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என அத்தங்கிகாவனூர் கிராமசபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெரியபாளையத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் பேசினார். எனவே, அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக திறக்காமல் வீணாகும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post ஓராண்டுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.
