ஈரோடு அருகே கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 31: ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி, 63வது மைலில் உள்ள ஊஞ்சலூர் பிரிவு கால்வாய் அருகே, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் கடந்த 21ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை, ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி, ஊஞ்சலூர் பிரிவு கால்வாய் அருகே, கீழ்பவானி வாய்க்காலின் 63வது மைலில், வாய்க்காலில் இறங்கி, காலிக்குடங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அப்போது, ஆகஸ்ட் 15 அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானப் பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் தயாரிக்கப்பட்ட அமரர் மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

வாய்க்கால் கரையில் மண் திருட்டு, நீர் திருட்டு மற்றும் மரங்களை வெட்டி திருடுவது மற்றும் பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு துணை போகும் நீர்வளத் துறை அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் புங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதி கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post ஈரோடு அருகே கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: