இந்நிலையில் 2017, 2019ம் ஆண்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ரெட்டேரி ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அதன் பின்பு இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்த முடியுமா என அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாகவும் குறுகி வரும் நீராதாரங்கள் மற்றும் பருவநிலை மாறுபாடுகளால் நீரின் அளவு குறைந்து, நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. பின்னர் வருங்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து நீர் ஆதாரங்களில் இருந்து எவ்வாறு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்படி, சென்னை குடிநீர் வாரியம் மறுசுழற்சி நீர் பயன்பாட்டின் சாத்தியங்கள் குறித்து சென்னை ஐஐடியுடன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு, நெசப்பாக்கத்தில் ஒரு கோடி லிட்டர் திறனில் 3ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏரிக்கு அருகில் 60 லட்சம் லிட்டர் திறன் கொண்ட உயர் தொழில்நுட்பத்திலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சென்னையை சுற்றியுள்ள சிறிய ஏரிகளை பாதுகாத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்குடன் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து குடிநீர் ஆதாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டு தரமான குடிநீர் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டேரி ஏரியின் நீரை சுத்திகரித்து வழங்க ஒரு கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் ரெட்டேரி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.21.39 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன டிஏஎப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏரி நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 2 நிலை திட வடிகட்டிகள் மூலம் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு இறுதியாக குளோரினேஷன் செய்து உயர் தரத்திலான குடிநீர் கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் நீர் சுத்திகரிப்பதற்காக ஏரியில் மிதக்கும் நீர் உந்து நிலையம், புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 1.5 கிலோ மீட்டருக்கான குழாய்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் வறட்சி காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய ரெட்டேரி ஏரி அதன் பின்பு கவனிப்பின்றி மீன்பிடி தளமாகவும், அசுத்தம் நிறைந்த ஏரியாகவும் பார்க்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் அது கொளத்தூர் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுவதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
The post ரெட்டேரி ஏரியில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு : விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது: ரூ.22 கோடி செலவில் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.