நெல்லையில் மண்டல மாநாடு அக்னிவீர் திட்டத்தில் என்சிசி மாணவர்கள் அதிகம் தேர்வு

*தமிழ்நாடு, புதுச்சேரி துணை இயக்குநர் ஜெனரல் தகவல்

நெல்லை : இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் என்சிசி மாணவர்கள் அதிகம் தேர்வு பெற்றுள்ளதாக நெல்லையில் நடந்த என்சிசி மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி இயக்குனரக துணை இயக்குநர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி தெரிவித்தார்.நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட என்சிசி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாடு மற்றும் என்சிசி மாணவர்களுக்கான சீருடை பணி வேலை வாய்ப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை ஐந்தாவது தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் என்சிசி இயக்குநகரத்தின் துணை இயக்குநர் ஜெனரல் அதுல் குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு மண்டல அளவிலான என்சிசி மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.மாநாட்டிற்கு தமிழ்நாடு 5வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் பாபி ஜோசப், 3வது பெண்கள் பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் தீபக்சிங், நெல்லை 9வது சிக்னல் கம்பெனி கமாண்டிங் ஆபிசர் சின்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் செய்யது அலி பாதுஷா வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்துல் காதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக என்சிசி துணை இயக்குநர் அதுல் குமார் ரஸ்தோகி, ராணுவம் கப்பல் படை மற்றும் விமானப்படையில் சேர்வதற்கான விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் துணை இயக்குநர் ஜெனரல் அதுல் குமார் ரஸ்தோகி கூறுகையில், என்சிசியில் பயிற்சி பெற்ற என்சிசி ‘பி’ மற்றும் சி சான்றிதழ் பெறுகின்ற மாணவர்களுக்கு சீருடை பணியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. குறிப்பாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ அக்னி வீர் திட்டத்தில் பெருவாரியான என்சிசி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள என்சிசி மாணவர்களுக்கு விரைந்து என்சிசி சான்றிதழை வழங்கும் முயற்சிகள் என்சிசி இயக்குனகரகத்தின் சார்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநாட்டில் திரளான என்சிசி மாணவர்கள் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் ஜெய ரோனின் ஆசிர் சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக என்சிசி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை என்சிசி மாணவி லத்தீ பா தஸ்லீம் நன்றி கூறினார். என்சிசி மாணவி சிவசங்கரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபேதார் மேஜர் சந்திராச் சாரி, சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், நாயக் சுபேதார் ராவ், சிஹெச்எம் சதீஸ், என்சிசி ஆபிஸர் ரதிஸ் குமார் மற்றும் ராணுவ வீரர்கள்
செய்திருந்தனர்.

The post நெல்லையில் மண்டல மாநாடு அக்னிவீர் திட்டத்தில் என்சிசி மாணவர்கள் அதிகம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: