குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு நிலங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்: நில நிர்வாக ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘‘அரசின் நிதி நிர்வாகத்தை பாதுகாக்கும் வகையில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நில நிர்வாக ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் கோபால நாயக்கர் சன்ஸ் என்ற நிறுவனத்துக்கு 43 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் 1923ம் ஆண்டு அரசு வழங்கியது. அந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையை, கடந்த 2020ம் ஆண்டு அரசு தொடங்கியது. இதற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில், 43 கிரவுண்ட் நிலத்தில் 25 கிரவுண்ட் நிலம் தங்களுக்கு சொந்தமானது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டையும் தங்களுக்கு அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், 100 ஆண்டுகளாக நிலத்தின் உரிமையை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், பெரிய அளவிலான நிலத்தை குத்தகைக்கு விடும்போது அதன் வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால வரையறையில் குத்தகை வாடகையை உயர்த்த வேண்டும். அரசின் நிதி நிர்வாகத்தை பாதுகாக்கும் வகையில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நில நிர்வாக ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மதிப்புடைய அரசு நிலங்களின் ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என்று உத்தரவிட்டார்.

The post குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு நிலங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்: நில நிர்வாக ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: