குன்றத்தூர்: சிறுகளத்தூர் ஊராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடிப்படிகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைற்றை ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றியினை தெரிவித்து கொண்டானர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகளத்தூர் ஊராட்சி 4வது வார்டு பகுதியான ஈவேரா தெருவில் 40 அடி அகலம் கொண்ட பிரதான சாலை உள்ளது. இந்த பிரதான சாலையை பொதுமக்கள் அதிகமாக உபயோகப்படுத்தி வந்தனர். இந்நிலையில், இச்சாலை பகுதியில் வீடுகள் கட்டியிருக்கும் ஒருசில தனிநபர்கள், தங்களது வீட்டின் வாசற்படி, மாடிப்படி, கழிவுநீர் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவற்றை 4 முதல் 6 அடி வரை சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.
இதனால், 40அடி அகலம் கொண்ட பிரதான சாலை, தற்போது அகலம் குறைந்து 15 அடியாக சுருங்கி காணப்படுகிறது. இதனால், இந்த ஈவெரா சாலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்கள் மட்டுமின்றி செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமமாக இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில், சிறுகளத்தூர் ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட சாலையினை ஊராட்சி மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தபோது, சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது உறுதியானது.
அதனைதொடர்ந்து, நேற்று முதற்கட்டமாக பெக்லைன் இயந்திரம் கொண்டு, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் கழிவுநீர் தொட்டி, வாசற்படி உள்ளிட்டவைகளை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, இனிவரும் காலங்களில் பொது இடங்களை ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் தனிநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுகளத்தூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், பெரியார் ஈவேரா சாலையில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிமென்ட் சாலை ஆகியவை விரைவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட உள்ளது என்று ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு பணிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post சிறுகளத்தூர் ஊராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.