வில்லங்க சான்று தொடர்பான விவரங்களை கணினியில் பதிய ரூ.36.58 கோடி ஒதுக்கீடு: பதிவுத்துறை தகவல்

சென்னை: வில்லங்க சான்று தொடர்பான விவரங்களை கணினியில் பதிய 36.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்’ திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் ‘ஸ்டார் 2.0’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

1975 ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். 2021-2022-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க 01.01.1950 முதல் 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-II பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணி முடிவடைந்தவுடன் 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வில்லங்க சான்று தொடர்பான விவரங்களை கணினியில் பதிய ரூ.36.58 கோடி ஒதுக்கீடு: பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: