தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தருமபுரி : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் கொட்டும் கனமழையால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் சுமார் 22,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீரும் கே.ஆர்.அணையில் இருந்து 2853 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட நீரானது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,100 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஓகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றில் இறங்கவோ அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மேட்டூர் அணையை வந்து அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: