அதிமுக, பாஜ கூட்டணியில் தேமுதிக இல்லை: பிரேமலதா பேச்சு

சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மற்றும் அடுத்த மாதம் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பேசிய பிரேமலதாவிஜயகாந்த், ‘‘இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். தேமுதிகவை பொறுத்தவரை இதுவரை யாரிடமும் கூட்டணி இல்லை என்று முடிவு செய்யவில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கண்டிப்பாக தெரிவிப்போம். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நல்ல முடிவு எடுக்கப்படும். திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து வந்த தகவல் தவறானது. நாங்கள் ஒருபோதும் பேசவில்லை என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘தலைவரிடம் அறிவுரை கேட்பதற்கு ஒன்றுமில்லை. அரசியல் என்பது வேறு. சினிமா என்பது வேறு. விஜயகாந்த் 40 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வளர்ந்தவர். அவரைப் போன்று இன்னொருவர் பிறந்து வந்தால்தான் உண்டு. அப்படி அதையும் மீறி வர நினைத்தால் மோசமான விளைவுகளைத்தான் சந்திப்பார்கள். மணிப்பூரில் நடந்த விஷயம் நிச்சயமாக ஒட்டுமொத்த பெண்களுக்கு ஏற்பட்ட ஒரு தலைகுனிவு. ஆனால், பிரதமர் மோடி உலக நாடு முழுவதும் சுற்றி வருகிறார். இப்போது உள்ள சூழ்நிலையில் தேமுதிக தலைமையில் எந்த கூட்டணியும் அமைப்பதாக முடிவு எடுக்கப்படவில்லை.’’ என்றார்.

The post அதிமுக, பாஜ கூட்டணியில் தேமுதிக இல்லை: பிரேமலதா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: