ஊட்டி, ஆனைக்கட்டியில் ரூ.19.10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

ஊட்டி : ஊட்டி அருகே ஆனைக்கட்டி கிராமத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.19.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பட்டது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆனைக்கட்டி கிராமத்தில் 2021-22ம் நிதியாண்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.10 லட்சம் மதிப்பில் புதிதாக உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசால் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனைக்கட்டி கிராமத்தில் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்துவது என்பது எளிதல்ல. எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் இந்த உடற்பயிற்சி கூடத்தினை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்வதோடு, உபகரணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.இப்பகுதியில் ஏதேனும் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் இருப்பின் அதனை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு குழந்தைகளின் வருகை, எடை, உயரம் ஆகியவற்றினை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களின் வருகை, கல்வி கற்றல் ஆற்றலினை நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், பிடிஓக்கள் ஸ்ரீதரன், நந்தகுமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி, ஆனைக்கட்டியில் ரூ.19.10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: