சாரல் மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைவு திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல், படகு சவாரி

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. இங்கு குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் அருவியில் தண்ணீர் கொட்டும். இதனால் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தாலும் , விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மழைக்காலங்கள் மற்றும் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போது திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், சில நாட்கள் சாரல் மழை மட்டும் பெய்தது. மலை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்ததால் திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வந்தது.
இதனால் அருவியின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் பரந்து விரிந்து கொட்டியது.

ஆனால் இந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் கோதையாற்றில் தண்ணீர் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு விரும்பி வருகின்றனர். இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திற்பரப்பு அருவிக்கு அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் பலர் உல்லாச குளியல் போட்டனர். திற்பரப்பு அருவி மேல் தடாகத்தில் உள்ள தடுப்பு அணையில் இருந்து தண்ணீர் வழிந்து செல்லும் எல்லா இடங்களிலும் பயணிகள் ஆர்வமுடன் குளித்தனர். இதைபோன்று ஏராளமானோர் தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரி சென்றனர். இதில் கோதையாறில் படகு சவாரி செய்து, ஆறு பாய்ந்து செல்லும் அழகையும், கோதையாற்றில் இரு கரையோரங்களில் உள்ள இயற்கை அழகையும் ரசித்தனர்.

The post சாரல் மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைவு திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல், படகு சவாரி appeared first on Dinakaran.

Related Stories: