கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற திருவாரூர் உள்பட 4 தாலுகாவில் துவங்கியது

 

திருவாரூர், ஜூலை 21: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டு காலத்திற்குள்ளாகவே தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்காக அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடைகளில் பதிவு செய்வதற்கான முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. அதன்படி, முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாமானது வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதேபோல, 2ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5ம் தேதி துவங்கி 16 ம்தேதி வரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பதிவு நடைபெறும் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய 4 தாலுக்கா பகுதிகளிலும் விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடைப் பணியாளர் மூலம் வீடு வீடாக வழங்கும் பணி நேற்று துவங்கியது. திருவாரூர் தாலுகா அம்மையப்பன் பகுதியில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணியை எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் மற்றும் ஆர்.டி.ஓ சங்கீதா துவக்கி வைத்தனர். இதில் தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற திருவாரூர் உள்பட 4 தாலுகாவில் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: