கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; வங்கி கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கி கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

சென்னை:

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தலைமையில் இன்று (19.07.2023) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜகநாதன்.இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் நா.சுப்பையன்.இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வு) விஜயராணி.இ.ஆ.ப., உட்பட கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சில வாக்குறுதிகளையும் தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை நிரைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில், முத்தாய்ப்பான பொதுமக்களால் மிகுந்து எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதிதான் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குகின்ற வாக்குறுதி. அந்த வாக்குறுதியினை நிறைவேற்றுகின்ற வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வகையான ஆலோசனைகளை செய்து, அதற்கான வியூகங்கள், திட்டங்களை வகுத்து, நிதி ஆதாரங்களை ஒதுக்கி, இப்போது அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் தந்துள்ளார்கள்.

அந்தவகையில் பல்வேறு துறைகள் இந்த பணிக்காக பணிக்கப்பட்டுள்ளார்கள். அதில் கூட்டுறவுத்துறை அனைத்து நியாயவிலைக்கடையில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அவர்களது வீடுகளிலே கொண்டு சேர்க்கும் பணியினை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்கள். அதை இரண்டு பிரிவுகளாக, முதற்கட்டமாக வருகின்ற 24ஆம் தேதி முதல் முகாம்கள் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலமாக விண்ணப்பங்களை அவர்களது இல்லங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்வார்கள். விண்ணப்பங்கள் வழங்கும் போது, உரிமைத்தொகை விண்ணப்பங்களை 24ஆம் தேதி முதல் எப்போது திரும்ப முகாம்களில் வழங்க வேண்டும் என்ற விவரத்தை தெரிவிப்பார்கள்.இந்தப்பணியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

பின்னர். இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இந்தப்பணி நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை எவ்வாறு வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது குறித்து திட்டமிடுவதற்காக கூட்டுறவுத்துறை செயலாளர், பதிவாளர், இணைப்பதிவாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் தோறும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வந்து சேர்ந்து விட்டதா என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளார்கள். இத்திட்டம் ஒரு மகத்தான திட்டம், ஒரு கோடிக்கும் மேற்ப்பட்ட மக்கள் பயன்பெறுகின்ற திட்டம். எனவே, எந்தவித குளறுபடிகளும் இருந்து விடக்கூட்டது என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கடைகள் பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி சில இடங்களில் முதற்கட்டமாக 60 சதவீதமும் இரண்டாம் கட்டமாக 40 சதவீதமும் செயல்படுத்தவும், சில இடங்களில் 50 :50 என்ற விகிதத்திலும், சில இடங்களில் 500 குடும்ப அட்டை உள்ள கடைகளில் முதற்கட்டமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் இரண்டாம் கட்டமும் என சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து இடங்களிலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் தாமதமின்றி விண்ணப்பங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வழங்கும் போது, வங்கி கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கி கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தற்போது 75000 முதல் 100000 வரையிலான புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. மேலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு 21 இலட்சம் புதிய வங்கி கணக்குகள் தொடங்க வழிவகை செய்யப்படும். பொது விநியோகத்திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல், இப்பணிகளுக்கான பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியினை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை கண்காணிக்க மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, ஏற்கனவே தொளிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகளைப் பின்பற்றி இத்திட்டத்தினை மக்களிடத்திலே முழுவதுமாக கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்கள்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; வங்கி கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கி கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: