ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன?

ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இந்த மாதத்தில்தான். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல் வடமாவட்டங்களில் முக்கியமான நிகழ்வு.

அதனுடன், கத்தரி, மொச்சையுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டுக் குழம்பையும் அம்மனுக்கு படைப்பது அற்புதமான நிகழ்வு. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தீ மிதிப்பது, பால் குடம் எடுப்பது, பொங்கல் வைப்பது போன்றவை அதிகம் நடைபெறும் மாதம் ஆடி. அம்மியே பறக்கும் ஆடிக் காற்றில், தொற்று நோய்களும் வேகமாக பரவும் என்பதாலேயே, வீடுகளின் முன்பு வேப்பங்குலை கட்டப்படுகிறது.

பருவமழை தொடங்கும் ஆடி மாதத்தில் ஆறுகள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடும். விவசாய நிலங்களை செழிக்க வைப்பதற்காக ஓடி வரும் ஆடி நீர்ப்பெருக்கை, வணங்கி விவசாயிகள் வரவேற்பார்கள்.

கரைகளை நிறைத்தபடி, சுழன்றோடும் காவிரியை கர்ப்பிணியாக பாவித்து, வழிபடுவது டெல்டா மாவட்டங்களில் ஒரு முக்கிய பண்டிகை. காவிரிக்கு கலவை சாதம் படையலிடும் மக்கள், புதுமணத் தம்பதிகளுக்கு புதிய மஞ்சள் கயிறுகளை அணிவிப்பதும் ஆடிப்பெருக்கு பண்டிகையின் ஓர் அங்கம்.

இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதில்லை என்பதோடு, புதிதாக திருமணமான தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது என்பதும் தமிழ் மக்களின் முக்கிய விதி.

ஆடி மாதத்தில் கருத்தரித்தால், இதிலிருந்து 10வது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு, வெப்பத்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பதே நம் முன்னோர்கள் வகுத்த முக்கியமான அறிவியல் காரணம்.

The post ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? appeared first on Dinakaran.

Related Stories: