அமலாக்கத்துறையின் விசாரணையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் விவரங்களை கேட்டறிந்தார். வழக்கை துணிவுடன் எதிர்கொள்ள அமைச்சர் பொன்முடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சரது மகன் சிகாமணி ஆகியோரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது ஒரு அரசியல் ரீதியான சோதனை என பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவுக்கு எதிர்கட்சியினர் பங்கேறிருக்க கூடிய கூட்டத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்ததோடு, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார். மேலும் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறையின் விசாரணையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: