தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆலோசனை கூட்டம்: பணிக்குழு அலுவலர்கள் பங்கேற்பு

தாம்பரம்: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து பணிக்குழு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி கடந்த 10ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தலைமையில் பணிக்குழு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவிகளிடம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பத்தினை பெற்று எவ்வாறு மொபைல் ஆப் மூலமாக, பயோ மெட்ரிக் கருவி மூலம் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. இப்பணியினை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் அருகே உரிய விண்ணப்ப பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்களை முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே நேரிடையாக குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கே சென்று அந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் விண்ணப்பம் பதிவு செய்ய முகாமிற்கு வரவேண்டி நாள், நேரம் மற்றும் குடும்ப அட்டை எண்ணை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்க உத்தரவிடப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஒளிநகல் எடுத்து பயன்படுத்துதல் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அந்தந்த குடும்பத்தலைவியே அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு உள்ள கைப்பேசி, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து, கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு விண்ணப்பப் பதிவு முகாமிலும் ஒரு மைய பொறுப்பு அலுவலர், விண்ணப்ப பதிவு தன்னார்வலர் பணியில் இருப்பார்கள். மேலும் முகாமிற்கு ஆவணங்கள் சரிபார்த்து வழங்கிட ஒரு உதவி மைய தன்னார்வலரும் பணியில் இருப்பார். மேற்படி முகாம்களை மண்டல அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்கள் பார்வையிட்டு பொதுமக்கள் எளிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்யவார்கள்.

விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வரும் பொதுமக்கள் எளிதான வகையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பொருட்டு உரிய வசதிகளை முகாமில் செய்து தர அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டது. முகாம்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையில், தவறான கருத்துக்களை பரப்பி அதன்மூலம் கூட்ட நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படின் தவறான தகவல் பரப்பிய நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து முகாம்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தடுப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் நடவக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாள்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாநகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆலோசனை கூட்டம்: பணிக்குழு அலுவலர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: