‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

* 2016ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளார்
* தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும்

சென்னை: தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரான சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் ஸ்ரீராமனுஜர் மிஷன் டிரஸ்ட்டை, வெங்கட சரவணன்(எ)பிரசன்ன வெங்கடேச சாமியார் சதுர்வேதி என்பவர் நடத்தி வருகிறார். இவர் தன்னை ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று அறிவித்து நகரில் வலம் வந்தார். அறக்கட்டளைக்கு வரும் பக்தர்களை தன்பக்கம் கவரும் வகையில், அரிசிரியை வெண் பொங்கலாக மாற்றுவது போன்ற சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளவர்களை தன் பக்தர்களாக மாற்றினார்.

இதனால் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை சதுர்வேதி சாமியாரை பார்க்க பல மணி நேரம் காத்திருந்தனர். வித்தைகள் மூலம் சதுர்வேதி சாமியார் தனக்கென என ஒரு பக்தர்கள் கூட்டத்தை வைத்திருந்தார்.
இந்நிலையில், தி.நகரில் உள்ள ஆசிரமத்தில் பவுர்ணமி தினத்தில் அவர் ஆன்மிக சொற்பொழிவு நடத்துவார். இதற்காக பல மாநிலங்களில் இருந்து தொழிலதிபர்கள், பல அதிகாரிகள் அவரது ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் சதுர்வேதி சாமியாரின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது பிரச்னைகளை தீர்க்க சாமியரை தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் அடிக்கடி சந்தித்து ஆர்சீர்வாதம் பெற்று வந்தார்.

அப்படி வந்தபோது, தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது 16 வயது மகளை தன் வசப்படுத்தி சதுர்வேதி சாமியார் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தனது சீடர்களாக மாற்றிவிட்டார். பிறகு தொழிலதிபரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பூஜைகள் செய்வதாக கூறி அவரது மனைவி மற்றும் மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து அவரது வீட்டையும் அபகரித்து கொண்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சாமியார் சதுர்வேதி மீது போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் புகாரில் உள்ள தகவல்கள் உண்மை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதைதொடர்ந்து சாமியார் சதுர்வேதி மீது கற்பழிப்பு, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 2004ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்தார். அதன் பிறகு தொழில் வளர்ச்சிக்கான பூஜைகள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் சாமியார் சதுர்வேதி மீது புகார் அளித்தனர். ஐந்தாவது புகார் தான் பாலியல் புகார். இன்று வரை அந்த புகார்கள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தொழிலதிபர் அளித்த வழக்கில், சதுர்வேதி சாமியார் மீது மகளிர் நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், திடீரென சதுர்வேதி சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து சதுர்வேதியை பிடிக்க மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. சதுர்வேதியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவரை கடந்த 2016ம் ஆண்டே பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சதுர்வேதி சாமியார் மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை மத்திய குற்றப்பிரிவில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதையடுத்து மோசடி வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சதுர்வேதி சாமியார் கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து நீதிமன்றம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியாரை மோசடி வழக்கில், பொது அறிவிப்பு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 82(2) ன் கீழ் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. அதைதொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இவர் பற்றி யாரேனும் தகவல் அளித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை சதுர்வேதி சாமியார் மீது பாலியல் மற்றும் மோசடி ஆகிய 2 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: