தியாகதுருகம் அருகே முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுஉச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட கொ.பட்டி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான முனியப்பன் கோயில் உள்ளது. இக்கோவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த காரணத்தால் அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் புதிய கோயிலை கட்ட முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 30ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கடந்த 7ந் தேதி யாகசாலை பிரவேசம், மண்டல ஆராதனையுடன் முதல் கால யாகசால பூஜை நடைபெற்றது. 8ந் தேதி காலை ஆச்சார்ய விசேஷ சாந்தி, பஞ்சசூக்த பாராயணம், பூர்ணாமுதி தீபாராதனையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தேவபாராயணம், பூர்ணாகுதி ஆகியவற்றுடன் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. மேலும் நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியுடன் நான்காம் கால யாகபூஜை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 10 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு முனியப்பன் கோயில் கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோயில், முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், ஆகாச கருப்புசாமி கோயில் ஆகிய கோயில்களின் கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் முனியப்பன் சாமி உள்ளிட்ட சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றார். 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post தியாகதுருகம் அருகே முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: