கோவூர், அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள திருத்தேர் திருப்பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆகியோர் இன்று (09.07.2023) காஞ்சிபுரம் மாவட்டம், கோவூர், அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள திருத்தேர் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.

1008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், தெய்வச் சேக்கிழார் பெருமான் மற்றும் தெய்வ தியாகராசரால் பாடல் பெற்றதுமான சிறப்பினை உடையது அருள்மிகு சுந்தரேசுவர் திருக்கோயிலாகும். இது சென்னையைச் சுற்றி அமைந்துள்ள நவகிரக தலங்களில் புதன் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக திகழ்கிறது.‘ இத்திருக்கோயின் திருத்தேர் சிதலமடைந்த நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 99 லட்சத்தில் புதிய திருத்தேர் அமைக்க இன்று பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள தொகையினை நம் பகுதி மக்கள் உபயதாரர் பங்களிப்பாக வழங்க ஒப்புதல் வழங்கி அதில் 80 சதவீத நிதியை வழங்கியுள்ளோம். அதேபோல இந்த கோயில் கும்பாபிசேக பணிகளுக்காக ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு பணிகளை ஒருங்கே முடித்து அடுத்த எட்டு மாதத்தில் கும்பாபிசேகத்தை நடத்தி, திருத்தேரையும் வீதி உலா வர செய்திடும் வகையில் நமது பணிகள் அமைந்திட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிட தயாராக உள்ளேன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரை சுற்றி நவக்கிரங்களுக்கும் தலங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களை தரிசிக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு செல்ல இயலாதவர்கள் பயன்பெறும் வகையில் நமது பகுதியை சுற்றி அமைந்துள்ள கொளப்பாக்கம், சோமங்கலம், மாங்காடு, போரூர், குன்றத்தூர் திருநாகேஸ்வரம், கிருகம்பாக்கம் மற்றும் பூவிருந்தவல்லி பகுதிகளில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களை விளம்பரப்படுத்தி நவக்கிர சுற்றுலா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை செய்து தந்திட வேண்டும். இக்கோயிலுக்கு விரைவில் அமைக்கப்பட உள்ள அறங்காவலர் குழுவினரோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த திருக்கோயிலை மேம்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலையத்துறை எந்த காலத்திலும் இல்லாத வகையில் வரலாற்றை பதிவு செய்து இறையன்பர்களின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 2012 ம் ஆண்டில் ரூ24 லட்சம் மதிப்பீடு போடப்பட்ட அளவிலே இருந்த திருத்தேர் திருப்பணி. இவ்வரசு பொறுப்பேற்ற பின் ரூ 60 லட்சம் திருத்திய மதிப்பீட்டில் பணிகளை விரைவுபடுத்தி முடித்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நேற்றைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பகுதிக்கு அருகே உள்ள சீட்டணஞ்சேரியில் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது. இன்றைய தினம் அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் தேர் 30 ஆண்டுகளாக முன்பே சிதிலமைந்த நிலையில், இன்றைய தினம் மாவட்ட அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் உதவியுடன் உபயதாரர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.49 லட்சம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிதி ரூ.50 லட்சத்தையும் சேர்த்து 99 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் செய்கின்ற பணியை தொடங்கி வைத்துள்ளோம்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், அருள்மிகு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் புதிய தங்கத் தேர்களும், சென்னை, அருள்மிகு காளிகாம்பாள், இருக்கன்குடி, திருத்தணி, திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய திருக்கோயில்களுக்கு 5 புதிய வெள்ளித்தேர்களும் செய்யும் பணிகளும், சுமார் ரூ.31 கோடி செலவில் 51 புதிய மரத்தேர்களும் செய்யும் பணிகளும், ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் மரத்தேர் மராமத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல குடமுழுக்குகள் அதிகமாக நடைபெற்ற ஆட்சியாக இந்த ஆட்சிதான் திகழ்கிறது. திருவட்டாறு திருக்கோயிலில் 390 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டும், சுமார் 123 ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி திருக்கோயிலில் கடந்த வாரமும் குடமுழுக்கு நடைபெற்றது. இன்றைய தினம் வரை 862 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. கோவூர் சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்பதால் சுமார் ரூ. 70 லட்ச ரூபாய் செலவில் 12 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் ஆவணி மாதம் பாலாலயம் செய்ய உள்ளோம். நில மீட்பை பொறுத்தவரையில் ரூ. 4,795 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் பரப்பளவு நிலங்களை இறைச்சொத்து இறைவனுக்கே என்ற வாக்கிற்கிணங்க ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆட்சியாகும். இறையன்பர்களுடைய அடிப்படை தேவைகளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு துறையாக இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை திகழ்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமணங்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திருக்கோயில்களின் சார்பில் திருமணம் நடத்திட வேண்டும் என்று முடிவு எடுத்து கடந்த ஆண்டு 500 திருமணங்கள் இலவசமாக நடத்தப்பட்டன. இந்த ஆண்டு 600 திருமணங்கள் நடத்திட அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் 34 திருமணங்களும், பிற மண்டலங்களில் 219 திருமணங்களும் நடத்தப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருமணம் கருணை உள்ளத்தோடு நடைபெற்ற திருமணமாகும். பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் நடத்தி வைத்த திருமணம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட திருமணம். விளம்பரத்திற்காக நடத்தப்படுகின்ற திருமணங்கள் இப்படித்தான் அமையும் என்பதற்கு அண்ணாமலை நடத்தி வைத்த திருமணங்களே சாட்சியாகும்.

இந்த அரசு பொறுப்பேற்றபின் 80 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை, தென்முடியனூர், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், 12 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுரை கள்ளிக்குடி அருள்மிகு வாலகுருநாத சுவாமி திருக்கோயில், சேலம் மாவட்டம், திருமலைகிரி மற்றும் வடகுமரை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்கள், கரூர், வீரணம்பட்டி, அருள்மிகு அய்யனார் திருக்கோயில், விராலிமலை, அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. மேல்பாதியில் இயல்பு நிலை ஏற்பட்ட பிறகு திருக்கோயிலை திறக்க அனைத்து பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. இப்படி பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கும் முடிவை ஏற்படுத்துகின்ற வகையில் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் இரா. வான்மதி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், ஊராட்சி மன்றத் தலைவர் பா.சுதாகர், வந்தே மாதவரம், எத்திராஜ், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தாமரைக்கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோவூர், அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள திருத்தேர் திருப்பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். appeared first on Dinakaran.

Related Stories: