பள்ளி செல்லா குழந்தைகள் கண்காணிப்பு குழு கூட்டம்

சேந்தமங்கலம்: எருமப்பட்டி ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த வட்டார அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வட்டார கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட தொடக்க நிலை உதவி திட்ட அலுவலருமான குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: கலெக்டர் அறிவுறுத்தலின்படி 6 முதல் 18 வயது வரை உள்ள இடைநிற்றல், இடம்பெயர்ந்த மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை, பள்ளியில் மீண்டும் சேர்க்க வட்டார அளவிலான அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எருமப்பட்டி ஒன்றியத்தில் இடம்பெயர்ந்த மாணவர்கள் அதிகமுள்ள போடிநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, ஊராட்சி பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்தும், அரசு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். ள்ளி செல்லாத குழந்தைகளே இல்லாத வட்டாரமாக கொண்டு வர அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை கிராம பகுதிகளில் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர் அருண், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார், பிடிஓ தமிழரசி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பழனிவேலு, பெரியசாமி, தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி செல்லா குழந்தைகள் கண்காணிப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: