மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக தாது மணல் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் அருகே புது எடையூர்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடலுக்குள் பலத்த நீரோட்டத்தோடு அலையில் அடித்து வரப்பட்ட தாது மணற்குவியல் கடற்கரை முழுவதும் பரவியுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இந்த கறுப்பு மணலில் காந்தகம் வைத்தால் இழுக்கும் திறனுடன் ஒட்டிக் கொள்கிறது. மற்ற மணல்கள், காந்தகத்தில் ஒட்டும் திறனற்றவை என குறிப்பிடத்தக்கது. இத்தகைய கறுப்பு நிற தாது மணல் என்பது, நமக்கு இயற்கையின் கொடையாகும்.
அதாவது, பல்வேறு மலைகள், பாறைகள் சமவெளிகளை கடந்து வந்த ஆறுகள், கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் மேற்பரப்பை அரித்து, நீரோட்டத்தோடு கொண்டு வந்து கடலில் சேர்க்கும். பின்னர், அவை கடற்கரையில் ஒதுங்குகின்றன. கனமான தாது மணல் என்பது, தாது வைப்புகளின் ஒரு தொகுப்பாகும். இந்த கறுப்பு மணலில் உள்ள சிர்கோனியம், டைட்டானியம், தோரியம், டங்ஸ்டன், அரிய பூமிக்கூறுகள், தொழில்துறை கனிமங்கள் வைரம், சபையர், கார்னெட் மற்றும் எப்போதாவது விலைமதிப்பற்ற உலோகங்கள் அல்லது ரத்தின கற்கள் ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
குறிப்பாக, இத்தகைய கறுப்பு நிற தாது மணல், இயற்கையாகவே கதிரியக்க தன்மை கொண்டவையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு தமிழக கடற்கரையில் இருந்து அள்ளப்படும் மணலில் இருந்து பல்வேறு விதமான தாது பொருட்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, தாது மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்க அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடலின் தன்மை மாறும்போது, சில நேரங்களில் அலையில் அடித்து வரப்பட்ட தாது மணல் கரைப்பகுதியில் தேங்கி நிற்கும். கடல் சீற்றம் அதிகம் ஏற்படும்போது, கரைப்பகுதியில் தாது மணல் அலையில் அடித்து வரப்பட்டு, மற்ற மணலுடன் கரைப்பகுதியில் தேங்கி நிற்கும். மேலும், தாது மணல் நீரோட்டத்துடன் அடித்து வரப்படும் நேரங்களில் கடல் பலத்த சீற்றமாக காணப்படும். தற்போது, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தேங்கி நிற்கும் தாது மணல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post மாமல்லபுரம் கடற்கரையில் தாது மணல் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.