மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா… டிராகன், யானை, குதிரை போன்ற உருவகங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு!!

சென்னை : சென்னையில் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடர்ந்து 2வது ஆண்டாக நடைபெற உள்ளது. சர்வதேச பட்டம் விடும் திருவிழா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக பட்டம் விடும் திருவிழா சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 2வது ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.வெளிநாடுகளில் நடப்பதை போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலானில் பட்டங்கள் பறக்க விடப்பட உள்ளன.

டிராகன், யானை, குதிரை போன்ற உருவகங்கள், கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட பட்டங்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் நான்கு நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த பட்டம் விடும் திருவிழாவில் அனைத்து வயதினரும் பங்கேற்களலாம் எனக் கூறப்படும் நிலையில், பெரியவர்களுக்கு ரூ. 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் நடைபெறும் எனவும், பொதுமக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் எனவும் சுற்றுலாதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா… டிராகன், யானை, குதிரை போன்ற உருவகங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: