மராட்டிய மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு: சரத் பவாரின் சட்ட நகர்வால் அஜித் பவாருக்கு சிக்கல்

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு செய்த சட்ட நகர்வுகளை போலவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் செய்திருப்பதால் அஜித் பவார் அணிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித் பவார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணியில் இணைந்தார். உடனடியாக அவர் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் தனது அணியில் இருப்பதாக அஜித் பவார் கூறி வருகிறார். இவர்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்று இருக்கிறார்கள்.

இந்நிலையில், சிவசேனா கட்சியை உடைத்து பிரித்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையின் மீது சபாநாயகர் ராகுல் நர்வேகர் உடனடியாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே அணி செய்த சட்ட நகர்வே போலவே சரத் பவார் தரப்பும், அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.

மறுபுறத்தில் தாங்கள் தான் உண்மையான கட்சி என்று அஜித் பவார் கூறுவதில் இருந்து காத்து கொள்ள தேர்தல் ஆணையத்திலும் சரத் பவார் முறையீடு செய்திருக்கிறார். கட்சிக்கு உரிமை கோரும் அஜித் பவார் தரப்பு கொறடாவையும் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அரசியல் கட்சி தான் கொறடாவையும், சட்டமன்ற கட்சி தலைவரையும் நியமிக்க முடியும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே ஷிண்டே தரப்பும், அஜித் பவார் தரப்பும் தகுதி நீக்க நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

The post மராட்டிய மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு: சரத் பவாரின் சட்ட நகர்வால் அஜித் பவாருக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: