சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2022-23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ் மண்வளம்’ என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேளாண்மை – உழவர் நலத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மண்வளம்’ எனும் இணைய முகப்பு தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்றைய தினம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. ‘தமிழ் மண்வளம்’ இணைய முகப்பின் பயன்கள் விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ //tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில் தமிழ்மண் வளம் இணையதளத்தை அணுகலாம். இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மண்டல வாரியாகவும் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். “தமிழ் மண்வளம்” என்ற இணைய முகப்பு இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டிலேயே முன்னோடியாக விளங்குகிறது. இந்த இணைய முகப்பின் பயனாக, விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதன் மூலம் சாகுபடி செலவு குறைவதுடன், மண் வளம் காக்கப்பட்டு, பயிர் மகசூல்
அதிகரிக்கும்.
The post நிலத்தில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்த தமிழ் மண்வளம் எனும் இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.