திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம்

* 25 மெட்ரிக் டன் விவசாயிகளிடம் பெற இலக்கு

* ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் முதன்முறையாக கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாஸ்கரபாண்டியன் கூறியதாவது: திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லாம் தேங்காய் விலை வீழ்ச்சி அடைகிறதோ அப்போது அரசின் மூலமாக ஆதரவு விலை அளிக்கப்படுகின்றது. இன்று 250 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் சரி, விலை வீழ்ச்சி அடைந்தாலும், அப்பொழுது ஆதரவு விலையை அறிவிக்கின்ற பொழுது விவசாயிகள் பலன் பெறுவார்கள். கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக உள்ளது. விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட கொப்பரைத் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைத்திட 2023 ஆம் ஆண்டுக்கான விலை ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொப்பரைத் தேங்காயின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமலும், வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிகபட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். தரமான கொப்பரை தேங்காய் இருந்தால் கிலோ ஒன்றுக்கு ₹112 வரைக்கும் கொடுக்க முடியும்.

அதன்படி அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ₹108.60 என்ற விலையைக் கொடுத்து கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 15 மெட்ரிக் டன்னும், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 10 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 25 மெட்ரிக் டன்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விவசாயிகள் தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், இதன் மூலமாக கிலோ ஒன்றுக்கு ₹40லிருந்து 60 வரை விவசாயிகளுக்கு வருமானம் ஈட்ட முடியும். விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி தங்களின் பெயர், செல்போன் எண், ஆதார் அட்டை எண், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் நகல்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குனர், மாவட்ட நேர்முக உதவியாளர் வேளாண்மை இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: