ஆனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

ராமநாதபுரம்: ஆனி மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்ய ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்றது ராமேஸ்வர ராமநாதசுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம். அதுமட்டுமின்றி ஆனி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வடமாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே ராமேஸ்வரம் வருகை தந்துள்ளனர்.

ராமேஸ்வரம் வருகை தந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 கோயில் தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை மாதந்தோறும் வருகின்ற நிலையில் இன்று வருகின்ற அமாவாசை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். மேலும், பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோயில் பகுதிகள், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: