குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சாலைகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களை, புளூகிராஸ் அமைப்பினர் பிடித்தனர். குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் தங்களது நிம்மதியை இழந்து தவித்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் அளித்தனர். இதனால் பொதுமக்களின் நலன் கருதி, தெருநாய்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி ஆணையர் தாமோதரன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
முதல்கட்டமாக, தெருநாய்களின் தொல்லை குறித்து சென்னை, வேளச்சேரியில் உள்ள புளூகிராஸ் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து சென்ற புளூகிராஸ் அமைப்பினர், கடந்த மூன்று தினங்களுக்கு முன் குன்றத்தூர் வந்து, தெருநாய்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். பொதுவாக தெருநாய்களின் நடமாட்டம் எந்தெந்த பகுதிகளில் அதிகமாக உள்ளது. அவைகள் எங்கு ஒன்றாக தங்குகின்றன போன்ற விவரங்களை நேரில் கண்டறிந்தனர். பின்னர் நேற்று முன்தினம் முதல் களத்தில் இறங்கிய புளூகிராஸ் அமைப்பினர் குன்றத்தூர் நகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தெருநாய்களை வலை வைத்து விரட்டிப் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 2வது வார்டுகளில் மொத்தம் 35 தெருநாய்கள் பிடிக்கப்பட்டது. பின்னர், அவைகள் பாதுகாப்பாக அதற்குரிய தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னை, வேளச்சேரி கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் முறையாக கருத்தடை சிகிச்சை செய்து, மீண்டும் ஏற்றிய இடத்திலேயே இறக்கி விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்றத்தூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதன்மூலம் இனி வரும் காலங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் தெரு நாய்களின் தொல்லையின்றி நிம்மதியாக வாழலாம் என்று நகராட்சி ஆணையர் தாமோதரன் கூறினார். நகராட்சியின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The post குன்றத்தூர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்திய 35 தெரு நாய்கள் பிடிபட்டன: புளூகிராஸ் அமைப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.