கொளப்பாக்கம் – ஊனைமாஞ்சேரி இடையே ரூ.2.85 கோடியில் பிரதான சாலை பணி தொடக்கம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல்

கூடுவாஞ்சேரி: தினகரன் செய்தி எதிரொலியால், கொளப்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி இடையே ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பிரதான சாலையை அமைக்கும் பணியை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊனைமாஞ்சேரி- கொளப்பாக்கம் பிரதான சாலை. இது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய யூனியன் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 2011- 16ம் ஆண்டில் ரூ..38 லட்சம் செலவில் 30 அடி அகலத்தில் தார் சாலையாக அமைக்கப்பட்டது. பிறகு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் சென்றது.

இந்நிலையில், 30 அடி அகலத்தில் இருந்த பிரதான சாலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி 20 அடி சாலையாக குறுகியுள்ளது. தற்போது குண்டும், குழியுமாகி, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும் மாறி வருகிறது. சாலை பழுதால் சரிவர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே சுற்றுப்புற கிராம மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த மே மாதம் 30ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ..2 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மேற்படி சாலையை அமைக்க பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நேற்று நடந்தது.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக அவை தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஜேவிஎஸ் ரங்கநாதன், பாமக ஊராட்சி மன்ற தலைவர் எம்.சி.மகேந்திரன் தலைமை தாங்கினர். துணை தலைவர் தனசேகரன், ஊராட்சி செயலர் டில்லி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு சாலை அமைக்க பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.

அப்போது ஊனைமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி அருகே இந்திரா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 160 இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜேவிஎஸ் ரங்கநாதன் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தார். அப்போது, நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீசீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

* சமுதாய கூடத்தில் மாடி கட்ட பூமிபூஜை
ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டியபடி கடந்த 2017-18ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டன. இதில் மேல் மாடி கட்டுவதற்காக மேலும் ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணியை எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர், குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார். 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை மற்றும் பிரியாணி வழங்கினார்.

The post கொளப்பாக்கம் – ஊனைமாஞ்சேரி இடையே ரூ.2.85 கோடியில் பிரதான சாலை பணி தொடக்கம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: