எண்ணூர் முகத்துவார ஆற்றில் தூண்டில் வளைவு, தூர்வாரும் பணி தீவிரம்: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்றில் தூண்டில் வளைவு மற்றும் தூர்வாரும் பணிகளை கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
மழைக்காலங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் புழல் ஏரி உபரி நீர் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு வழியாக எண்ணூர் முகத்துவார ஆற்றில் இணைந்து கடலில் கலக்கிறது. இப்படி உபநீர் வரக்கூடிய ஆற்றில் மணல் திட்டுகள் அதிகமாகிவிட்டதால் உபரிநீர் சீராகச் செல்ல முடியாமல் ஆற்றையொட்டி உள்ள குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கடலுக்கு பைபர் படகு மூலம் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் முகத்துவார ஆறு மற்றும் கடல் இணையும் பகுதிகளில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களின் நலன் கருதி, முகத்துவார ஆற்றுப்பகுதியில் தூர்வாரி கரை அமைத்து நெட்டுக்குப்பம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் கலாநிதி வீராசாமி எம்பி, காமராஜ் துறைமுக சி.எஸ்.ஆர் நிதியில் இதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து ரூ.150 கோடி செலவில் எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கவும், முகத்துவார ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணூர் காமராஜ் துறைமுக சிஎஸ்ஆர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணி துறையின் மூலம் இதற்கான பணி கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பைபர் படகில் சென்று ஆற்றுப் பகுதிகளை ஆய்வு செய்த அவர்கள், பணிகளின் விவரங்கள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் மணிமாறன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர். அப்போது மழைக்காலம் வருவதற்கு முன் இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலாநிதி வீராசாமி எம்பி ஆலோசனை வழங்கினார். இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதாது என்பதால் கூடுதலாக ரூ.70 கோடி சி.எஸ்.ஆர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆய்வில் கலந்து கொண்ட எண்ணூர் காமராஜ் துறைமுக அதிகாரியிடம் எம்பி கோரிக்கை விடுத்தார்.

The post எண்ணூர் முகத்துவார ஆற்றில் தூண்டில் வளைவு, தூர்வாரும் பணி தீவிரம்: எம்பி, எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: