குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே பேருந்தில் பயணித்தபோது வடமாநில வாலிபர் தவறவிட்ட பணத்தை மீட்ட முதியவர், அதனை போலீசாரிடம் ஒப்படைத்தார். குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவர், நேற்று முன்தினம் அரசுப் பேருந்தில் குன்றத்தூர் வந்து இறங்கினார். அப்போது, பேருந்தின் சீட்டுக்கு அடியில் மணி பர்ஸ் ஒன்று கிடப்பதை அவர் பார்த்துள்ளார். அதனை எடுத்து பார்த்தபோது, அதில் பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் இருந்தது அவருக்கு தெரிய வந்தது. அதனை அவர் குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு, பர்சை பிரித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் ரூ.17,500 ரொக்கப் பணம், ஏடிஎம் கார்டு இருந்தது தெரியவந்தது. மேலும், புகார் ஏதும் வராத நிலையில் ஏடிஎம் கார்டின் நம்பரை வைத்து போலீசார் வங்கியில் விசாரித்தனர். அப்போது, அது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அசான் (20) என்பவரது மணிபர்ஸ் என்பதும், திருமுடிவாக்கத்தில் தங்கி அவர் வேலை செய்வதும் தெரியவந்தது.
மேலும், தன்னுடன் பணிபுரியும் 3 பேரின் வார சம்பள பணத்தை எடுத்து வந்தபோது, பேருந்தில் அவர் மணிபர்சை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை தவறவிட்ட அசனை வரவழைத்த போலீசார், மணி பர்சை கண்டெடுத்த கிருஷ்ணனையும் அழைத்து, அவர் கையாலேயே நேற்று மணிபர்சை திருப்பிக் கொடுத்தனர். வட மாநில வாலிபர் தவறவிட்ட பணத்தை முதியவர் கண்டு, குன்றத்தூர் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post பேருந்தில் பயணித்தபோது பணத்தை தவறவிட்ட வடமாநில வாலிபர்: போலீசாரிடம் முதியவர் ஒப்படைத்தார் appeared first on Dinakaran.