புதுகை பொற்பனைக்கோட்டையில் முதல்கட்ட அகழ்வாராய்ச்சி: 3 கலர்களில் கண்ணாடி, நீல நிற பானை ஓடு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தை சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை இருந்ததற்கான கட்டுமானம், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021ல் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1.5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்ட நிலையில், பல வகையான பானை ஓடுகள், பாசி, மணிகள், பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கிண்ணங்கள், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்தன.

இதையடுத்து, பொற்பனைக்கோட்டையை அகழாய்வு செய்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவிட்டன. இதனை தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் முதற்கட்டமாக கடந்த மே 20ம் தேதி முதல் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக பொற்பனைக்கோட்டையில் 6 குழிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டது. முதல் மூன்று குழிகளில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியின் போது, 7 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டது. இது சங்க காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தொடர்ந்து 4 மற்றும் 5வது குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இந்த குழிகள் 30 செ.மீ முதல் 40 செ.மீ. ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இதில் 5வது குழியில் தொல் பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளது. கருப்பு, பச்சை, மஞ்சள் நிற கண்ணாடிகள், சூதுபவளம் வகையை சேர்ந்த அகேட் கல் மணி, வட்ட சில்கள், ஊதா நிற பானை ஓடுகள், அதிகளவில் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர். இவை எந்த காலத்தை சேர்ந்தவை என ஆய்வு நடந்து வருகிறது. தொடர்ந்து அகழாய்வு செய்யும்போது பல்வேறு வரலாற்று ஆதாரங்கள், பொக்கிஷங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதுகை பொற்பனைக்கோட்டையில் முதல்கட்ட அகழ்வாராய்ச்சி: 3 கலர்களில் கண்ணாடி, நீல நிற பானை ஓடு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: