காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 2 நாளில் 476 மனுக்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடந்த காவலர் குறை தீர்க்கும் முகாமில் 1,682 மனுக்கள், 2வது கட்டமாக 1,010 மனுக்கள் மற்றும் 3வது கட்டமாக 1,025 மனுக்கள் என மொத்தம் 3,717 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் ஆணையர் சங்கர் ஜிவால், 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டு 328 மனுக்கள் பெற்றார்.

நேற்று 2வது நாளாக, 132 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறை கேட்டு 148 மனுக்களை பெற்றார். 2 நாளில் 476 மனுக்களை பெற்றார். பணிமாறுதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், காவலர் சேம நலநிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை கோருதல் உள்பட துறை ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தாண்டு சங்கர் ஜிவால் அலுவலகத்தில் நேரில் கொடுத்த 830 குறைதீர் மனுக்களில், இதுவரை 634 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீதி 196 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாமில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) லோகநாதன், இணை ஆணையர் (தலைமையிடம்) சாமுண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), சவுந்தராஜன் (ஆயுதப்படை-1), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 2 நாளில் 476 மனுக்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: