லால்குடி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த மறுநாளே திருச்சி, லால்குடி அருகே ஆலங்குடி மகாஜனம் வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கப்பட்டதால் கிராம பெண்கள் ஆட்டம், பாட்டத்துடன் பயணம் செய்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நந்தியாறு, கூழையாறுகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்றுமுன்தினம் வருகை தந்தார். ஆலங்குடி மகாஜனம் ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண்களை வயல்வெளியில் நடந்து சென்று முதல்வர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் எங்கள் கிராமத்திற்கு பஸ்வசதி குறைவாக உள்ளது. கூடுதலாக பஸ்விட வேண்டும் என்றனர்.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், உடனடியாக லால்குடியிலிருந்து – ஆலங்குடி மகாஜனத்திற்கு பஸ் வசதி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கலெக்டர் பிரதீப்குமார், 10ம்தேதி முதல் மகாஜனத்திற்கு அரசு நகர பேருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது. மகாஜனம் கிராமத்திலிருந்து லால்குடிக்கு புறப்பட்ட பஸ்சில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு மகிழ்ச்சியுடன் பயணித்தனர். இதுகுறித்து ஆலங்குடி மகாஜனம் கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய பஸ் வசதி செய்து கொடுத்த முதல்வருக்கு நன்றி’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
The post முதல்வரிடம் பெண்கள் கோரிக்கை வைத்த ஒரே நாளில் பஸ் இயக்கம்: ஆட்டம் போட்டு உற்சாக பயணம் appeared first on Dinakaran.