12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது: பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனருக்கு கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். இதற்கு பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்கக இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இங்கு பணிபுரியும் முறையான பணியாளர்கள் அயற்பணியிலும் பிற பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுகிறார்கள். ஒப்பந்த பணியாளர்கள் வருங்காலத்தில் அரசுத்துறையில் முறையான ஊதியத்திற்கோ ஆண்டு ஊதிய உயர்விற்கோ, நிரந்தர நியமனத்திற்கோ மற்றும் முன்னுரிமைக்காகவோ கோரி விண்ணப்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படுகிறார்கள்.

பகுதி நேர பணியாளர்கள் அரசாணை பள்ளிக்கல்வித்துறை கடந்த 11.11.2011ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த அரசாணைப்படி ஆண்டுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்க வேண்டும் (மே மாத தவிர்த்து) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது: பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: