காதலியை சரமாரி வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை: காதலை முறித்து கொண்டதால் ஆத்திரம்

மார்த்தாண்டம்: கல்லூரி மாணவியை சரமாரி வெட்டி விட்டு காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் பெர்ஜின் ஜோஸ் (23). அங்குள்ள கல்லூரியில் பிஏ படித்தபோது, அவரும் உடன் படித்த மடிச்சல் காட்டுவிளையைச் சேர்ந்த விஜயக்குமார் மகள் டேன்நிஷா (23) என்பவரும் காதலித்துள்ளனர். தற்போது டேன்நிஷா பிஎட் படித்து வருகிறார். பெர்ஜின் ஜோஸ் அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, டேன்நிஷா அவரை தவிர்க்க தொடங்கியுள்ளார்.

இதனால் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக பெர்ஜின் ஜோஸ் மிரட்டியுள்ளார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன் டேன்நிஷாவுக்கு போன் செய்த பெர்ஜின் ஜோஸ், லேப்டாப்பில் உள்ள போட்டோக்கள் அனைத்தையும் உனது முன்னிலையில் டெலிட் செய்து விடுகிறேன் வா என்று அழைத்துள்ளார். அதை ஏற்று வந்தவரை பைக்கில் விரிகோடு அருகே காக்கட்டான்குளம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது லேப்டேப்பில் உள்ள படங்களை டெலிட் செய்யுமாறு டேன்நிஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பெர்ஜின் ஜோஸ் பைக்கில் வைத்திருந்த அரிவாளை எடுத்து டேன்நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் வரவே, பெர்ஜின் ஜோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். டேன்நிஷா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெர்ஜின் ஜோஸ், விரிகோடு முண்டவிளை பகுதியில் சென்ற பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

The post காதலியை சரமாரி வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை: காதலை முறித்து கொண்டதால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Related Stories: