மோசமான வானிலை விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை, இடி மின்னலுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால், சென்னையில் தரை இறங்க வேண்டிய 8 விமானங்கள், நாற்பத்தைந்து நிமிடத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து பறந்தன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு, பலத்த இடி மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மழையின் வேகம் அதிகம் இல்லை என்றாலும், இடி மின்னல் சூறைக்காற்று அதிகமாக இருந்தது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், மற்றும் சென்னையில் தரையிறங்க வேண்டிய பெங்களூர், அகமதாபாத், சிலிகுரி, ராய்ப்பூர், ஐதராபாத், தூத்துக்குடி, மும்பை ஆகிய தனியார் பயணிகள் விமானம் உட்பட 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டு பறந்தது. அதைப்போல் நேற்று மாலை சென்னையில் இருந்து மும்பை, மைசூர், கொல்கத்தா, உள்ளிட்ட 5 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

The post மோசமான வானிலை விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: