மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 2028ல்தான் திறக்கப்படும்: குறுகிய சாலை, புவியியல் நிலைமை கடினம்,அதிகாரிகள் தகவல்

சென்னை: மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் வரும் 2028ம் ஆண்டு தான் திறக்கப்படும் என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.61,843 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (3வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (5வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன. 40க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் பொது தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ்நடை மேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் அமைய உள்ளது. 78 அடி, 55 அடி ஆழத்தில் என 3 அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கான தளத்துடன் ரயில் நிலையம் அமைய உள்ளது. 4,854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கும் மயிலாப்பூர் ரயில் நிலையம் ஒரு முக்கிய நிலையம் ஆகும்.

பொதுவாக, மற்ற மெட்ரோ நிலையங்களில் இரண்டு நுழைவாயில் மற்றும் இரண்டு வெளியேறும் வாயில் இருக்கும். ஆனால் மயிலாப்பூரில் அமைய இருக்கும் மெட்ரோ நிலையத்தில் பறக்கும் ரயில் நிலையம், எம்டிசி பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் லஸ் கார்னர் மற்றும் கால்வாய் கரை சாலையை இணைக்கும் வகையில் 5 நுழை வாயில் மற்றும் 5 வெளியேறும் வாயில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் சாலை குறுகியதாக இருப்பதாலும், புவியியல் நிலைமைகள் கடினமாக இருப்பதாலும் இந்த ரயில் நிலையத்தை அமைப்பது சவாலானதாக இருக்கும். எனவே பனகல் பார்க் – மயிலாப்பூர், மயிலாப்பூர்- ஐஸ்அவுஸ், ஆயிரம் விளக்கு-மயிலாப்பூர் மற்றும் கிரீன்வேஸ் சாலை-மயிலாப்பூர் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் 2028ம் ஆண்டு திறக்கப்படும். இதன் காரணமாக, இரண்டாம் கட்ட திட்டப்பணிகளில் கடைசியாக தயாராகும் ரயில் நிலையம் இதுவாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 2028ல்தான் திறக்கப்படும்: குறுகிய சாலை, புவியியல் நிலைமை கடினம்,அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: