பள்ளிகள் தாமதமாக திறப்பதால் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: கோடை விடுமுறையை ஈடுகட்ட, பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள மான்ஃபோர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், தகரி சிலம்பாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்பப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: சிலம்பம் விளையாட்டை பழகுவதன் மூலம் மாணவர்கள், கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். மாணவர்கள் படிப்பு படிப்பு என்று இருந்து விடக்கூடாது.

பெற்றோர்கள் சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. வெளிநாடு பயணங்கள் சென்று இருந்தாலும் தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் கோடை விடுமுறையை நீட்டிக்க சொல்லி அறிவுறுத்தி இருந்தார். அதன் பிறகு மீண்டும் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, நிருபர்களுக்கு அமைச்சர் அன்பில் அளித்த பேட்டி:

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ளாதது தவறுதான். அந்த தவறை ஒப்புக்கொள்கிறோம். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததன் காரணமாகவே மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளாத சூழல் உருவாகி உள்ளது. தவறு செய்த உடற்கல்வியல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இணை இயக்குனர் ஒருவருக்கும் அது சார்ந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் நிச்சயம் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடைபெறும். மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ளாதது தவறுதான்.

* முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததன் காரணமாகவே மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளாத சூழல் உருவாகி உள்ளது.

The post பள்ளிகள் தாமதமாக திறப்பதால் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: