கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: சினிமா கேமராமேன் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த மலையாள சினிமா உதவி கேமராமேனை கலால் துறையினர் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்தனர். அவர் போலீஸ் வசம் இருந்தபோதும் செல்போனில் சிலர் தொடர்பு கொண்டு கஞ்சா கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சமீப காலமாக கஞ்சா, எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருளின் விற்பனையும், பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோட்டயம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக கலால்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் துறையினர் அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் முண்டக்கயம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் துறையினர் அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிகாரிகளை சோதனை செய்ய உள்ளே அனுமதிக்கவில்லை. கடும் எதிர்ப்பையும் மீறி உள்ளே புகுந்து நடத்திய சோதனையில் படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 225 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்தது அந்த வீட்டில் தங்கியுள்ள சுகைல் சுலைமான் (28) என தெரியவந்தது. இவர் மலையாள சினிமாவில் உதவி கேமராமேனாக உள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான நீலவெளிச்சம், சதுரம் ஹிக்விட்டா உள்பட பல்வேறு படங்களில் உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அவரை கலால் துறையினர் கைது செய்தனர். சுகைல் சுலைமான் தான் கோட்டயம், முண்டக்கயம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதில் முக்கிய நபராக இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 50 கிராம் கஞ்சாவை ரூ2000க்கு விற்பனை செய்துள்ளார். குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இவர் சப்ளை செய்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசில் சிக்கியது தெரியாமல் கஞ்சா கேட்டு தொல்லை
கைது செய்யப்பட்ட சுகைல் சுலைமானிடம் கலால் துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவரது செல்போன் பலமுறை ஒலித்தது. எடுத்து பேசுங்கள் என போலீசார் கூறியதோடு, யார் பேசுகிறார்கள் என்பதை போலீசார் கண்காணித்தனர். அப்போது செல்போனில் தொடர்புகொண்ட பலரும் சுகைல் சுலைமான் போலீஸ் வசம் இருப்பதை அறியாததால் கஞ்சா கேட்டு அடம்பிடித்தனர். எனவே அவர்களையும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: சினிமா கேமராமேன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: